குழந்தை பெற்ற சில மணி நேரத்தில் இளம்பெண் சாவு

வால்பாறையில் குழந்தை பெற்ற சில மணி நேரத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். இதனால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட முயன்றனர்.

Update: 2023-04-26 18:45 GMT

வால்பாறை, ஏப்.27-

வால்பாறையில் குழந்தை பெற்ற சில மணி நேரத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். இதனால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட முயன்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

2-வது முறையாக கர்ப்பம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முத்துமுடி 2-வது டிவிசனை சேர்ந்தவர் கவுதமன். இவருடைய மனைவி குறிஞ்சிமலர் (வயது 28). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் குறிஞ்சிமலர் 2-வது முறையாக கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இவர் பிரசவத்திற்காக நடுமலை எஸ்டேட் வடக்கு பிரிவில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார்.

நேற்று முன்தினம் மாலை குறிஞ்சி மலருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.

பெண் குழந்தை பிறந்தது

இந்த நிலையில் இரவில் குறிஞ்சி மலருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் அரசு ஆஸ்பத்திா டாக்டர் மற்றும் செவிலியர்கள், குறிஞ்சிமலருக்கு தையல் போட்டு சிகிச்சை அளித்தனர். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் ஜெனரேட்டரை போடுவதற்கு சென்றனர். ஆனால் அதற்குள் மின்சாரம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் குறிஞ்சிமலருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாக கூறி மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் சாவு

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்த குறிஞ்சிமலரை, டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் குறிஞ்சிமலரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இறந்த குறிஞ்சிமலருக்கு ரத்தபோக்கு அதிகமாக இருந்த நிலையில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி ஆம்புலன்சில் அழைத்து வந்தபோது ஆம்புலன்சில் முதலுதவி அளிக்க ஊழியர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல் முயற்சி

இதனால் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி உறவினர்கள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் செய்ய முயன்றனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதை தொடர்ந்து மறியலுக்கு முயன்றவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போன் வெளிச்சத்தில் ஆபரேசன்

இதுகுறித்து உறவினர்கள் கூறியதாவது:-

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேசன் செய்யும் போது மின்சாரம் தடைப்பட்டது. இதை தொடர்ந்து செல்போன் வெளிச்சத்தில் ஆபரேசன் செய்தனர். இதன் காரணமாக ரத்தப்போக்கு அதிகமாகி உள்ளது. மேலும் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் பணியில் இல்லை. இதற்கிடையில் பொள்ளாச்சிக்கு வரும் வழியில் ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளிக்க ஊழியர் இல்லை. இதன் காரணமாக அந்த பெண் உயிரிழக்க நேரிட்டு உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


--------------

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில்

(பாக்ஸ்) டாக்டர்கள், செவிலியர்களிடம் அதிகாரிகள் விசாரணை

இளம்பெண் இறந்த சம்பவம் குறித்து அறிந்த கோவை மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் சந்திரா, கோவை மாவட்ட குடும்ப நலத்துறை இணை இயக்குனர் கவுரி ஆகியோர் உடனடியாக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஸ்பத்திரி பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நடந்தது.

விசாரணைக்கு பின்னர் அதிகாரிகள் நிருபர்களிடம் கூறுகையில், இளம்பெண் இறந்தது தொடர்பாக டாக்டர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இந்த விசாரணை அறிக்கையை கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுக்கு கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்