மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை பலி

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை பலியானார்.

Update: 2022-11-04 16:15 GMT

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி நவீன்நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 50). இவர், கன்னிவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயமாலா (46). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்தநிலையில் நேற்று ராஜேஷ், தனது மனைவி ஜெயமாலாவை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்-திருச்சி சாலையில் முள்ளிப்பாடி அருகே அவர்கள் வந்தபோது, திடீரென்று ஜெயமாலா மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெயமாலா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்