திருச்சியில் நடந்த வெவ்வேறு விபத்தில் ஆசிரியை, ரெயில்வே ஊழியர் பலி

திருச்சியில் நடந்த வெவ்வேறு விபத்தில் ஆசிரியை, ரெயில்வே ஊழியர் பலியானார்கள்.

Update: 2023-08-09 18:59 GMT

திருச்சியில் நடந்த வெவ்வேறு விபத்தில் ஆசிரியை, ரெயில்வே ஊழியர் பலியானார்கள்.

ஆசிரியை

மதுரை மாவட்டம் பெத்தானியபுரத்தை சேர்ந்தவர் பேட்ரிக் சந்திரன். இவரது மனைவி ஜோஸ்பின் மல்லிகா (வயது 40). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஜோஸ்பின் மல்லிகா மதுரையில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை டிரைவர் நிதிஷ்குமார் (23) என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் கார் திருச்சி - மதுரை சாலையில் வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி எதிரே வந்த சிமெண்டு கலவை எந்திர லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜோஸ்பின் மல்லிகா பலத்த காயமடைந்தார்.

சாவு

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். டிரைவர் நிதிஷ்குமார் பலத்த காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில்வே ஊழியர்

திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் ஓ.எப்.டி. காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). ரெயில்வே ஊழியர். இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் வசிக்கும் அவரது மைத்துனர் ராஜரீகன் நவல்பட்டு வந்திருந்தார்.

நேற்று காலை 7 மணி அளவில் மைத்துனரை ஊருக்கு வழியனுப்பி வைப்பதற்காக மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மதுரை செல்லும் பஸ்கள் நிற்கும் இடம் அருகே வந்தபோது, மதுரையில் இருந்து திருச்சி வந்த அரசு பஸ் மணிகண்டன் மீது மோதியது.

இந்த விபத்தில் மணிகண்டன் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். இதில் பஸ்சின் பின் சக்கரம் மணிகண்டன் தலையின் மீது ஏறி இறங்கியது. இந்த சம்பவத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். ராஜரீகன் லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்