நல்லப்பாம்பை கழுத்தில் போட்டப்படி டீ குடித்த தையல் தொழிலாளி
செங்கோட்டை அருகே நல்லப்பாம்பை கழுத்தில் போட்டப்படி டீ குடித்த தையல் தொழிலாளியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே பிரானூர் பார்டரில் உள்ள ஒரு டீக்கடையில் பரபரப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு நல்லப்பாம்பு டீக்கடை அருகே ஊர்ந்து வந்தது. அதை பார்த்ததும் அங்கே நின்றவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத்தொடங்கினர். அப்போது அங்கே வந்த அதே பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி அப்துல் ஜப்பார் (வயது 63) எந்தவித பயமும் இன்றி நல்லப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.
பின்னர் அதன் தலைப்பகுதியை கையில் பிடித்தபடி தனது கழுத்தில் மாலை போல் போட்டுக்கொண்டு, கடையில் டீ குடித்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்து தங்களது செல்போனில் படம் பிடித்தனர். பின்னர் அப்துல் ஜப்பார் அந்த பாம்பை பாதுகாப்பாக கொண்டு சென்று அருகில் உள்ள செங்கோட்டை குண்டாறு வனப்பகுதியில் விட்டார். இதற்கிடையே, பாம்பை தோளில் போட்டுக் கொண்டு அவர் டீ குடித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.