பவானி அருகே பெண் சாவில் திடீர் திருப்பம்: கொலையை மறைத்து நாடகமாடிய மகள் காதலனுடன் கைது- பரபரப்பு வாக்குமூலம்
பவானி அருகே பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையை மறைத்து நாடகமாடிய மகள், காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பவானி
பவானி அருகே பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையை மறைத்து நாடகமாடிய மகள், காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெண் சாவு
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு அண்ணாமலையார் வீதியை சேர்ந்தவர் சிவகார்த்தி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய மனைவி மேனகா (வயது 47). இவர்களுக்கு தீபிகா (22) என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் மேனகா கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்ைத கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திடீர் திருப்பம்
மேலும் இதுகுறித்து சென்னிமலையில் உள்ள மேனகாவின் தந்தை கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மேனகாவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்தது. அதில் மேனகாவின் கழுத்து நெரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் உருவானது.
இதையடுத்து போலீசார் தீபிகாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மேனகாவை தீபிகாவின் காதலன் யூ-டியூப் எடிட்டரான அதே பகுதியை சேர்ந்த தினேஷ் பாலா (22) என்பவர் கழுத்தை நெரித்து கொன்றதையும், இதனை மறைக்க தீபிகா நாடகமாடியதையும் ஒப்புக்கொண்டார்.
வாக்குமூலம்
இதைத்தொடர்ந்து தீபிகா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனது தந்தை இறந்த பிறகு என்னுடைய தாய் மேனகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவருடன் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்தார். இதனை நான் கண்டித்தேன்.
அவரது கள்ளக்காதலுக்கு நான் தடையாக இருந்ததால் அவர் எனக்கும், என்னுடைய காதலன் தினேஷ் பாலாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தார். இந்த நிலையில் எனது தாயின் கள்ளத்தொடர்பு குறித்து தினேஷ் பாலாவுக்கும் அக்கம்பக்கத்தினர் மூலம் தெரியவந்துள்ளது.
கழுத்ைத நெரித்து கொலை
வருங்காலத்தில் எங்களின் திருமண வாழ்க்கைக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என அவர் எண்ணினார். இதைத்தொடர்ந்து அவர் எனது தாயாரிடம் சென்று கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினார். இந்த நிலையில் நான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னிமலையில் உள்ள என்னுடைய தாத்தா வீட்டு்க்கு சென்றுவிட்டேன். அப்போது என்னுடைய தாய் வீட்டில் தனியாக இருந்தார்.
இதை அறிந்த தினேஷ் பாலா என்னுடைய வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கும், எனது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது முற்றியதால் ஆத்திரத்தில் எனது தாய், தினேஷ் பாலாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் எனது தாயின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
நாடகமாடினேன்
இதுகுறித்து அவர் என்னிடம் கூறினார். உடனே நான் சென்னிமலையில் இருந்து வீட்டுக்கு வந்தேன். கொலையை மறைக்கும் நோக்கத்தோடு தாயார் மேனகா கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக சென்னிமலையில் உள்ள தன் தாத்தா கந்தசாமிக்கு தெரியப்படுத்தினேன்.
பின்னர் அவர் மகள் மேனகா இறந்தது குறித்து விசாரணை நடத்த கோரி சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை
பிரேத பரிசோதனை அறிக்கையில் தாய் மேனகா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சித்தோடு போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். சந்தேகத்தின் பேரில் என்னை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் தாயாரை காதலன் தினேஷ் பாலா கொலை செய்ததையும், அதை மறைக்க ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த தாய் மேனகா மூச்சுத்திணறல் காரணமாக கட்டில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக உறவினர்களை நம்ப வைத்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கைது
இதைத்தொடர்ந்து தினேஷ் பாலா, தீபிகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காதலனுடன் சேர்ந்து தாயை பெண் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய் கொலை செய்யப்பட்டதை மறைத்து பெண் நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.