கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி திடீர் போராட்டம்

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மீண்டும் பணி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி திடீரென தர்ணா போராட்டம் நடத்தினார்.

Update: 2023-02-01 18:45 GMT

நாகர்கோவில்:

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மீண்டும் பணி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி திடீரென தர்ணா போராட்டம் நடத்தினார்.

மாற்றுத்திறனாளி போராட்டம்

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பனவிளையை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் படிக்கட்டில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் லிப்ட் ஆபரேட்டராக கடந்த 12 ஆண்டுகளாக இந்த வேலையை செய்து வந்தேன். ஆனால் திடீரென எனக்கு பணி வழங்கவில்லை. 6 ஆண்டுகளாக எனக்கு பணி வழங்காமலேயே இருக்கிறார்கள். வாழ்வாதாரத்துக்கு பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். மேலும் கோர்ட்டு உத்தரவுப்படி எனக்கு ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை

பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.போராட்டத்தில் ஈடுபட்ட கணேசன், தான் அணிந்திருந்த சட்டையில் கோர்ட்டு உத்தரவு தொடர்பான வழக்கு எண்ணை ஆங்காங்கே எழுதி வைத்திருந்தார். மேலும் நீதி வேண்டும் என கூறி பல வாசகங்களையும் அவர் சட்டையில் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்