பீன்ஸ், அவரைக்காய் விலை 'கிடுகிடு' உயர்வு
புதுக்கோட்டை உழவர்சந்தையில் பீன்ஸ், அவரைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து, கிலோ தலா ரூ.100-க்கு விற்பனையாகுகிறது.
வரத்து குறைவு
புதுக்கோட்டை உழவர்சந்தை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையாகுகிறது. சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து விவசாயிகள், வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். பொதுமக்களும் உழவர்சந்தையில் காய்கறிகள் வாங்க அதிகம் வருகை தருவது உண்டு. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
பீன்ஸ் கிலோ ரூ.110-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவற்றின் விலைகள் தலா ரூ.50 முதல் ரூ.60 வரை இருந்துள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக விளைச்சல் இல்லாததால் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
காய்கறி அளவு குறைந்தது
பீன்ஸ் காய்கறி ஊட்டி பகுதியில் இருந்து வரத்து காணப்படுகிறது. இதேபோல அவரைக்காய் திருச்சி மார்க்கெட்டில் இருந்து வருகிறது. புதுக்கோட்டையில் உள்ளூரில் அவரைக்காய் விளைச்சல் அதிகமாக இல்லை. அதனால் அவரைக்காய் விலையும் அதிகரித்துள்ளது. இதேபோல முருங்கைக்காய் வரத்து குறைந்ததாலும் கிலோ ரூ.120-க்கு விற்கிறது. இதனால் பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றை வாங்கும் அளவு பொதுமக்களிடம் குறைந்தது. ஓட்டல்களிலும் சாப்பாடுகளில் காய்கறி வகைகள், குழம்பிலும் இதன் அளவை சற்று குறைந்து விட்டனர்.
காய்கறிகள் விலை விவரம்
புதுக்கோட்டை உழவர் சந்தையில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் கிலோ கணக்கில் வருமாறு:- கத்திரிக்காய் ரூ.70-க்கும், தக்காளி ரூ.34-க்கும், வெண்டைக்காய் ரூ.25-க்கும், புடலங்காய் ரூ.30-க்கும், பீர்க்கங்காய் ரூ.40-க்கும், பாகற்காய் ரூ.55-க்கும், கொத்தவரைக்காய் ரூ.40-க்கும், முள்ளங்கி ரூ.35-க்கும், கேரட் ரூ.70-க்கும், பீட்ரூட் ரூ.40-க்கும், முட்டைக்கோஸ் ரூ.20-க்கும், சின்ன வெங்காயம் ரூ.75-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25-க்கும், கருணைகிழங்கு ரூ.50-க்கும் விற்பனையானது.