திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்
திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் திடீர் போராட்டம்
தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் 7 பேர் மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை தலைமையில் திருச்சி கோர்ட்டு அருகே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் நேற்று காலை 11 மணி அளவில் திடீரென இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் திருச்சி அரியாறு, கோரையாறு, பழைய கட்டளை, புதிய கட்டளை, உய்யகொண்டான், குடமுருட்டி கொடிங்கால் உள்ளிட்ட ஆறுகளின் பாதுகாப்பு திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி செயல்படுத்திட வேண்டும்.
கழிவுநீர் கலப்பதை...
உய்யகொண்டான் வாய்க்காலில்கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு மேற்கு தாசில்தார் ராஜவேலு, மாநகராட்சி உதவி ஆணையர் சதீஷ்குமார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வாய்க்காலில் இருந்து வெளியேறி கரைக்கு வரும்படி அழைத்தனர்.
ஆனால் அவர்கள் வரமறுத்து உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கருப்பு கொடியுடன் கோஷம் எழுப்பியபடி இருந்தனர். பின்னர் அதிகாரிகள் தொடர்ந்து சமாதானப்படுத்தியதையடுத்து நீண்டநேரத்துக்கு பிறகு அவர்கள் பகல் 2.45 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு கரைக்கு வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.