ஓடும் பஸ்சில் திடீர் தீ
கொடைக்கானலில் ஓடும் பஸ்சில் திடீர் தீ்ப்பிடித்தது. உடனே பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஓடும் பஸ்சில் தீ
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு குளு சீசன் நிலவி வருகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கொடைக்கானல் பஸ்நிலையத்தில் இருந்து வத்தலக்குண்டுவுக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பஸ் நிறுத்தத்திற்கு வந்தபோது பின்பக்க டயரில் திடீரென்று தீப்பிடித்தது.
இதில் பஸ்சின் பின்பகுதியில் இருந்து கரும் புகை குபுகுபுவென வெளியேறியது. இதை பார்த்ததும் அந்த பகுதியில் பஸ்நிறுத்தத்தில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டயரில் தீப்பிடித்து எரிவதை பஸ் கண்டக்டரிடம் கூறினர். உடனே அவர் பஸ்சை நிறுத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையறிந்த பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி அலறி அடித்து ஓடினர். பின்னர் பஸ் கண்டக்டர், டிரைவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் பஸ்சின் டயரில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
இதுகுறித்து கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து பஸ் கண்டக்டரிடம் கேட்டபோது, பஸ்சின் பின் சக்கரத்தை இணைக்க கூடிய இரும்பு கம்பியின் அச்சு முறிந்ததால் தீப்பிடித்ததாக கூறினார். மேலும் இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.