எடப்பாடி அருகேஓடும் பஸ்சில் திடீர் தீ-பயணிகள் உயிர் தப்பினர்

எடப்பாடி அருகே ஓடும் பஸ்சில் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், அந்த பஸ்சில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2023-08-12 21:52 GMT

எடப்பாடி:

ஓடும் பஸ்சில் திடீர் தீ

எடப்பாடி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று நண்பகல் நேரத்தில் சேலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அந்த பஸ்சை எடப்பாடி பகுதியை சேர்ந்த குமார் (40) என்பவர் ஓட்டிச்சென்ற நிலையில், அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (35) கண்டக்டராக இருந்துள்ளார்.

அந்த பஸ் எடப்பாடி-சேலம் பிரதான சாலையில், கேட்டு கடை பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு தொடர்ந்து சேலம் நோக்கி புறப்பட்டு சென்றது.

பஸ் கிளம்பி சிறிது தூரம் சென்ற நிலையில், பஸ்சின் முன் பகுதியில் இருந்து திடீரென பயங்கர புகையுடன் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்டு சத்தம் போட்டனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்திய நிலையில், பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக பயணிகள் வேகமாக வெளியேறினர்.

போராடி அணைப்பு

தொடர்ந்து பஸ்சின் முன்பக்கத்தில் தீ மளமளவென எரியத்தொடங்கிய நிலையில், அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் அந்த பகுதியில் இருந்த இளைஞர்கள் வீடுகளில் இருந்துதண்ணீரைக் கொண்டு வந்து பஸ்சின் மீது ஊற்றி தீயை அணைக்க போராடினர்.

இது குறித்து தகவல் அறிந்து எடப்பாடி தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள்ளாக அப்பகுதி மக்கள் நீண்ட போராட்டத்திற்கு பின் பஸ்சில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எடப்பாடி-சேலம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பஸ்சில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பிற்கு உள்ளானது. மேலும் பஸ்சில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அதில் இருந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

ஓடும் பஸ்சில் ஏற்பட்ட திடீரென ஏற்பட்ட தீ விபத்து குறித்து எடப்பாடி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்