கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா

பிள்ளையார்விளை கோவில் திருவிழாவில் ஒலிப்பெருக்கி வைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் திடீரென பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-30 20:23 GMT

நாகர்கோவில், 

பிள்ளையார்விளை கோவில் திருவிழாவில் ஒலிப்பெருக்கி வைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் திடீரென பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஊர் மக்கள்

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பிள்ளையார்விளை ஊர் மக்கள் ராஜமோகன் தலைமையில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடி கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரு சிலர் மட்டுமே கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும் என கூறினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இதனை தொடர்ந்து ஒரு சிலர் மட்டும் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பிள்ளையார்விளை ஸ்ரீமன் நாராயணன் சுவாமி நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கி வருகிற 9-ந் தேதியன்று வரை நடக்கிறது. கோவிலில் ஆண்டுக்கு இருமுறை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தநிலையில் பக்கத்து ஊர்களை சேர்ந்த சிலர் பிள்ளையார்விளையில் நிலம் வாங்கி வீடுகட்டி வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் திருவிழாவின்போது ஒலி, ஒளி அமைப்பதை தடுக்கும் விதமாக தற்போது செயல்படுகின்றனர். கோர்ட்டு உத்தரவின்படி ஒலி, ஒளி அமைக்கவும், திருவிழா நடத்தவும் உத்தரவு வழங்கியுள்ளது.

எனவே பிள்ளையார்விளை கிராமத்தில் ஒலி, ஒளி அமைக்கவும் பக்கத்து ஊரைச் சேர்ந்த நபர்களின் தூண்டுதலின் பேரில் தேவை இல்லாமல் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

அந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அரவிந்த், இது தொடர்பாக மாவட்ட சூப்பிரண்டை சந்தித்து மனு அளிக்கும்படி கூறினார். மேலும் கலெக்டர் அரவிந்த், சூப்பிரண்டை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் மனு அளிக்க வந்தவர்களிடம் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பணி விஷயமாக பணி விஷயமாக வெளியே சென்று இருப்பதாக கூறினார்.

இதனை தொடர்ந்து மனு அளிக்க வந்தவர்கள் தங்களை மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் அலைக்கழிப்பதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்