சாலையின் நடுவில் 'திடீர்' பள்ளம்

நாமக்கல் நகராட்சி 27-வது வார்டு தபால் நாராயணசாமி தெருவில் ஏற்பட்டு உள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2023-06-04 18:45 GMT

27-வது வார்டு

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 27-வது வார்டில் வெலிங்டன் தெரு, தூபான் குமாரசாமி தெரு, மலையாண்டி தெரு, வண்டிக்கார தெரு 1 மற்றும் 2, நடராஜபுரம் 2-வது தெரு, நடராஜபுரம் மெயின் தெரு, ராமசாமி தெரு, பேட்டை காலனி தெரு, வண்டிக்கார தெரு, தபால் நாராயணசாமி தெரு, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த வார்டில் 3 ரேஷன் கடைகள் உள்ளன. அதில் 1 வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

மேலும் இந்த வார்டில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகள் ஏதும் இல்லை. சில இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட வேண்டி உள்ளது.

இந்த வார்டில் 1,530 ஆண்கள், 1,610 பெண்கள் என சுமார் 3,140 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரூபா பாலாஜி வெற்றி பெற்றார். இங்குள்ள சில பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும் நிலை உள்ளது. மேலும் சாலை வசதியும் ஆங்காங்கே மேம்படுத்தப்பட வேண்டி இருப்பதாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

சாக்கடை கால்வாய்

இதுகுறித்து தபால் நாராயணசாமி தெருவை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஜெகநாதன் கூறியதாவது:-

இங்கு ஏற்கனவே உள்ள சாக்கடை கால்வாய்களில் மண் மற்றும் குப்பைகள் தேங்குவதால் அடிக்கடி அடைத்துக் கொள்கின்றன. மேலும் மழைக்காலங்களில் கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலைகளில் தேங்குகிறது. அதனால் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்படும். எனவே சாக்கடை கால்வாய் வசதியை மேம்படுத்தி, கழிவுநீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட குழிக்கு அருகே திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுவிட்டது. அதேபோல் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்து உள்ளது. அதன் காரணமாக இரவு நேரங்களில் அங்கு பள்ளம் இருப்பது தெரிவதில்லை. அதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே விரைவில் சாலையை சீரமைத்து தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சாலையை புதுப்பிக்க வேண்டும்

பேட்டைகாலனி தெருவை சேர்ந்த இல்லத்தரசி கனகம்:-

எங்கள் பகுதியில் பெண்களுக்கான சமுதாய கழிப்பிடம் உள்ளது. அது பராமரிப்பின்றி கிடந்தது. தற்போது அது சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதால் எங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது.

எங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே கழிவுநீர் செல்வதற்காக சிறிய அளவில் சாக்கடை கால்வாய்கள் உள்ளது. சில இடங்களில் அது மூடப்பட்டு இருக்கிறது. சில இடங்களில் அது திறந்த நிலையிலேயே உள்ளது. இரவு நேரங்களில் சாலையில் பள்ளம் இருப்பது தெரிவதில்லை. அந்தக் கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக சாலையில் பெரிய அளவிலான குழாய்கள் அமைத்து, அதன் மேலே சாலையை புதுப்பிக்க வேண்டும்.

மின்விளக்கு

நடராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்த முரளிதரன்:-

எங்கள் வார்டில் 3 ரேஷன் கடைகள் உள்ளன. அதில் ஒன்று தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அந்த ரேஷன் கடைக்கு நகராட்சி இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும். மேலும் ஆங்காங்கே சாலையோரம் மின்விளக்குகள் இல்லாமல் உள்ளது. அதன் காரணமாக இரவு நேரங்களில் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மின்விளக்குகளை அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

என்ன சொல்கிறார் கவுன்சிலர்?

27-வது வார்டு கவுன்சிலர் ரூபா பாலாஜி கூறியதாவது:-

நான் கவுன்சிலராக பொறுப்பேற்ற பிறகு தூபன் குமாரசாமி தெருவில் ரூ.6.50 லட்சத்தில் மழைநீர் வடிகால் சீரமைக்கப்பட்டது. மேலும் பேட்டை காலனி தெருவில் உள்ள பெண்களுக்கான சமுதாய கழிப்பிடம் ரூ.3 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதேபோல் வெலிங்டன் தெரு, மேட்டு தெரு, ராமசாமி தெருவில் தார் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.

மேலும் ஆங்காங்கே சாக்கடை கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி இருக்கும் இடங்களில் தூர்வார நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஆனாலும் அந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை. குறிப்பாக வண்டிக்காரன் தெரு, தபால் நாராயணசாமி தெரு, பேட்டை காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் சாக்கடை கால்வாயில் உள்ள கழிவுநீரும் மழைநீரோடு சேர்ந்து சாலைக்கு வந்து விடுகிறது. எனவே அந்த பகுதிகளில் சாக்கடை மழைநீர் வடிகால் அமைக்க வலியுறுத்தி வருகிறேன். அதேபோல் சேதமாகி உள்ள சாலைகளை சீரமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளேன். தொடர்ந்து மக்கள் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்

வார்டு மக்களுக்கு வேண்டியவை:-

1. நடராஜபுரம் மற்றும் வண்டிக்காரன் தெருவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு நகராட்சி இடத்தில் கட்டிடம் கட்டித் தர வேண்டும்.

2. வண்டிக்காரன் தெரு, தபால் நாராயணசாமி தெருவில் சாக்கடை மழைநீர் வடிகால் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

3. பேட்டை காலனி பகுதியில் ஆண்களுக்கான சமுதாய கழிப்பிடம் அமைக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்