பள்ளிக்கு செல்ல அரசு டவுன் பஸ் படிக்கட்டில் பயணித்த மாணவன் பலி

பள்ளிக்கு செல்ல அரசு டவுன் பஸ் படிக்கட்டில் பயணித்த மாணவன் பலி

Update: 2022-08-29 19:35 GMT

மதுரையில் பள்ளிக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ்சின் படிக்கட்டில் பயணித்த 9-ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

9-ம் வகுப்பு மாணவன்

மதுரை விளாங்குடி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களுக்கு 2 மகன்கள். இதில் மூத்த மகன் பிரபாகரன் (வயது 14), ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். 2-வது மகன் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று காலை பிரபாகரன் பள்ளிக்கூடம் செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறினான். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உள்ளே செல்ல முடியாமல் பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் பயணித்தபடி சென்றுள்ளான். அந்த பஸ் டி.டி.ரோடு வழியாக ஆரப்பாளையம் நோக்கி சென்றது.

தவறி விழுந்து பலி

மாணவன் பிரபாகரன் திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தான். கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கியதால் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பஸ் நிறுத்தப்பட்டது.

உயிருக்கு போராடிய அவனை அரசு ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரபாகரன் பரிதாபமாக இறந்தான்.

இந்த விபரீத சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். மாணவனின் உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதுரை நகரில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இருப்பினும் மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்வது தொடரத்தான் செய்கிறது. எனவே போலீசார் இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

9-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அவன் படிக்கும் பள்ளி மற்றும் அவனது ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்