மதுவுக்கு அடிமையாகி சாலையில் தகராறில் ஈடுபட்ட மாணவன் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றார்..!

மதுபோதைக்கு அடிமையாகி ரோட்டில் சுற்றிதிரிந்த மாணவனை மீட்டு கல்வி கற்க ஏற்பாடு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை பொதுமக்கள் பாராட்டினர்.

Update: 2022-08-22 23:54 GMT

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி போலீஸ் சரக எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது வாலிபர் 10-ம் வகுப்பு முடித்துள்ளார். அதன்பின் கடந்த ஒருவருடமாக பள்ளிக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி உள்ளார்.

கடந்த வாரம் மதுபோதையில் அந்த வாலிபர் பொதுவெளியில் பயங்கர தகராறில் ஈடுபட்டார். இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை பார்த்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பாலகிருஷ்ணன், உடனடியாக அந்த வாலிபர் மற்றும் அவர் பெற்றோரை நேரில் அழைத்து மனம்திருந்த செய்ய அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் அந்த வாலிபரை 11-ம் வகுப்பில் சேர்க்க தேவையான அனைத்து பொருளுதவிகளும், பண உதவிகளும் செய்து, மாவட்ட கல்வி அலுவலருடன் கலந்தாலோசனை செய்தார். பின்னர் அவரைபள்ளியில் சேர்க்கை நடவடிக்கை எடுத்தார்.

இதனை தொடர்ந்து கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு வேளாண்மை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். மது போதையில் தகராறில் ஈடுபட்ட மாணவன் மனம் திருந்தி ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்றார். கல்வி கற்க ஏற்பாடு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்