ரெயில் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டிய மாணவனுக்கு நூதன நிபந்தனைகளுடன் முன்ஜாமீன்

ரூட் தல எனக்கூறி ரெயில் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவனுக்கு நூதன நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-28 18:41 GMT

சென்னை,

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து வரும் குட்டி என்ற மாணவன், 'ரூட் தல' என கூறிக்கொண்டு சக மாணவர்களுடன், புறநகர் ரெயிலில் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டியதாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மாணவன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

3 பேர் கைது

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ''மனுதாரரும், வேறு சில மாணவர்களும் தங்களை 'ரூட் தல' என்று கூறிக்கொண்டு ரெயிலில் சக பயணிகளை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதை எதிர்த்து கேள்வி கேட்ட புகார்தாரரை, கற்களை கொண்டு வீசி தாக்கியுள்ளனர். தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் கூறியுள்ளனர். இந்த வழக்கில் 3 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்து விட்டனர். அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மனுதாரரையும் வழக்கில் போலீசார் சேர்த்துள்ளனர்'' என்று வாதிட்டார்.

ஓட்டல் ஊழியர்

இதையடுத்து, மாணவனையும், அவரது பெற்றோரையும் நேரில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, மாணவனின் தந்தை நேரில் ஆஜராகி, தன் மகனின் செயல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது, சிறிய ஓட்டலில் கணக்காளராக வேலை செய்து, தன் மகனை சிரமப்பட்டு படிக்க வைப்பதாகவும், அவனை மன்னிக்க வேண்டும் என்றும் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மாணவனின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதால் அவனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்குகிறேன். திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டு மற்றும் போலீசார் திருப்தி அடையும் வகையில் ரூ.25 ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் இந்த முன்ஜாமீன் தானாக தள்ளுபடி ஆகிவிடும்.

சேவை

ஜாமீன் உத்தரவாதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், விசாரணை அதிகாரி முன்பு ஒரு வாரத்துக்கு தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதைதொடர்ந்து, அண்ணாநகரில் உள்ள மித்ரா மறுவாழ்வு மையத்தில் 6 வாரம் ஒவ்வொரு சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை அங்குள்ளவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். அந்த சேவை குறித்து ஒரு பக்க அறிக்கையை எழுதி தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீதான விசாரணையை நவம்பர் 8-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்