இடைநின்ற மாணவி மீண்டும் படிக்க ஏற்பாடு
பாலிடெக்னிக் கல்லூரியில் இடைநின்ற மாணவி மீண்டும் படிக்க ஏற்பாடு செய்து நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கை எடுத்தது.
நெல்லை டவுன் தென்பத்து முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோதினி. இவர் கடந்த மாதம் நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "கடந்த 2018-20-ம் கல்வி ஆண்டில் நெல்லை அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன். ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் எந்த கட்டணமும் செலுத்த வேண்டாம் என்று கூறினார்கள். அதனால் எனது எஸ்.எஸ்.எல்.சி. அசல் மாற்று சான்றிதழ், மதிப்பெண், சாதி சான்றிதழ் ஆகியவற்றை கொடுத்து சேர்ந்தேன். பின்னர் குடும்ப வறுமையால் படிப்பை தொடர முடியவில்லை. 2018-ம் ஆண்டு முதல் பருவ தேர்வு மட்டும் எழுதியதோடு படிப்பை நிறுத்தி விட்டேன். கொரோனா காலம் முடிந்த பிறகு கல்லூரிக்கு சென்று எனது அசல் சான்றுகளை கேட்டபோது, கல்லூரி நிர்வாகம் என்னிடம் ரூ.30 ஆயிரம் கல்வி கட்டணம் செலுத்தினால் மட்டுமே அசல் சான்றிதழை தரமுடியும் என்று கூறினார்கள். எனவே எனது அசல் சான்றிதழ்களை பெற்றுத்தர வேண்டும்'' என்று அதில் கூறிஇருந்தார்.
நீதிபதி சமீனா, இந்த வழக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தினார். அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவி வினோதினி படிப்பை தொடருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் 2 தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு, மாணவி அந்த கல்லூரியில் படிப்பை தொடருவதாக தெரிவித்தார். அதன்படி மாணவிக்கு கல்வி உதவித்தொகை, புத்தகம் உள்ளிட்டவை இலவசமாக வழங்குவதாகவும், கல்லூரி பஸ்சை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
மாணவி 2023-24-ம் கல்வி ஆண்டில் சேர்ந்து கல்வியை தொடரவும், இடை நில்லாமல் படிப்பை முடிக்கவும் உறுதி அளித்தார். இதையடுத்து வழக்கு சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.