தந்தை இறந்த சோகத்திலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி

தந்தை இறந்த சோகத்திலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு ஆசிரியர்கள், சக மாணவிகள் ஆறுதல் கூறினர்.

Update: 2023-04-20 23:03 GMT

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் பெரியமேட்டுப்பாளையம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 57). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி பவானி. இவர்களுக்கு பொற்செல்வி (21), ஜெயலட்சுமி (16) என 2 மகள்கள் உள்ளனர்.

இவர்களில் பொற்செல்வி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஜெயலட்சுமி, திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்.

மூர்த்தி தனது மகள் ஜெயலட்சுமியிடம், படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என்று அடிக்கடி கூறி வந்தார். தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று கடைசி தேர்வு (சமூக அறிவியல்) என்பதால் ஜெய லட்சுமி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

தந்தை சாவு

இந்தநிலையில் மூர்த்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனார். இதனால் கடைசி தேர்வு எழுத தயாரான ஜெயலட்சுமி நிலைகுலைந்தார். தந்தை இறந்த துக்கத்தில் எப்படி தேர்வு எழுத செல்வது? என்று கலங்கினார்.

எனினும் தந்தையின் கல்வி ஆசையை நிறைவேற்றும் வகையில் நேற்று காலை சக மாணவிகள் துணையுடன் ஜெயலட்சுமி துக்கத்திலும் கடைசி தேர்வை எழுத பள்ளிக்கு சென்றார். முன்னதாக தந்தையின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

தேர்வு எழுதினார்

மாணவி ஜெயலட்சுமிக்கு அவருடன் படிக்கும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் ஜெயலட்சுமி கடைசி பரீட்சையை எழுதினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "எனது தந்தை எப்போதும் படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறுவார். அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் தேர்வு எழுதினேன்" என்றார்.

நேற்று மாலை மூர்த்தியின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. தந்தை இறந்த சோகத்திலும் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்