அரசு பள்ளி ஆய்வகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை

விருத்தாசலம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-29 19:48 GMT

விருத்தாசலம்,

இயற்பியல் ஆசிரியர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் 50 வயதுடைய ஆசிரியர். இவர் விருத்தாசலம் அருகே உள்ள அரசு பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 15 வயதுடைய மாணவி, பள்ளியில் உள்ள இயற்பியல் ஆய்வகம் வழியாக கழிவறைக்கு சென்றார். இதை பார்த்த அந்த ஆசிரியர், மாணவியை அழைத்து ஆய்வகத்தில் உள்ள குப்பைகளை அள்ளும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து மாணவி, குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்த போது, அந்த ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான மாணவி அழுதுகொண்டே, வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் கடும் அச்சத்தில் இருந்த மாணவி, கடந்த 3 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல், வீட்டில் அழுதபடியே இருந்ததாக கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அவர், நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். இதை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை தட்டிக்கேட்க, அவரது வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், விரைந்து சென்று இயற்பியல் ஆசிரியரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்