பெரியார், கருணாநிதிக்கு உருவச்சிலை அமைக்க வேண்டும்-மேயரிடம், திராவிடர் கழகத்தினர் மனு
நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பெரியார், கருணாநிதி ஆகியோரின் உருவச்சிலைகளை அமைக்க வேண்டும் என்று மேயரிடம், திராவிடர் கழகத்தினர் மனு கொடுத்தனர்.
நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பெரியார், கருணாநிதி ஆகியோரின் உருவச்சிலைகளை அமைக்க வேண்டும் என்று மேயரிடம், திராவிடர் கழகத்தினர் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, துணை ஆணையாளர் தாணுமலைமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாவட்ட திராவிடர் கழக தலைவர் ராசேந்திரன், செயலாளர் வேல்முருகன், காசி மற்றும் நிர்வாகிகள் மேயரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் கூறிஇருப்பதாவது:-
பெரியார், கருணாநிதி சிலை
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு லாலுகாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றி அந்த இடத்தை சீர்படுத்தி சிறிய அளவில் பூங்கா அமைக்க வேண்டும். நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள பெரியார் நூற்றாண்டு நினைவு தூணை உரிய முறையில் பராமரித்து சீரமைக்க வேண்டும். வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி குருகுல போராட்டம் நூற்றாண்டு விழா, வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்திய சமூக நீதி மாநாட்டின் நூற்றாண்டு விழா ஆகியவற்றின் நினைவாக நெல்லை மாநகராட்சியில் தந்தை பெரியாரின் உருவச்சிலை மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணாநிதி உருவச்சிலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு கூறிஉள்ளனர்.
வாறுகால் ஆக்கிரமிப்பு
நெல்லை கொக்கிரகுளம் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "இளங்கோவடிகள் தெருவில் அமைந்துள்ள வீடுகளுக்கு தெற்கு பகுதியில் கழிவுநீர் ஓடை செல்வதற்கு கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வாறுகால் அமைக்கப்பட்டு, அந்த வாறுகால் குறிச்சி ரோட்டில் உள்ள கழிவுநீர் ஓடையில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியை சிலர் ஆக்கிரமித்து விட்டதால், வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. எனவே அந்த வாறுகாலை சீரமைத்து தரவேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.
பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் மேலதெரு மக்கள் கொடுத்த மனுவில், மாநகராட்சிக்கு சொந்தமான பொது மக்கள் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும்'' என்றும், வி.எம்.சத்திரத்தை சேர்ந்த ஜோசப் அளித்த மனுவில், 'தங்களது பகுதியில் சாக்கடை, கழிவுநீர் தேங்கி உள்ளதை சரி செய்ய வேண்டும். கழிவுநீர் ஓடைகளை புதுப்பித்து கட்ட வேண்டும்' என்று கூறிஉள்ளார்.
தச்சநல்லூர் ஆனந்தபுரத்தை சேர்ந்த முருகன் கொடுத்த மனுவில், ஆனந்தபுரம் பகுதியில் கழிவுநீரோடை அமைத்து தரவேண்டும்.
சமுதாய நலக்கூடம், பூங்கா
மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெரு மேற்கு வட்டார ஊர் ஜமாத்தினர் அளித்த மனுவில், சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும். உடையார்பட்டி ஊர் மக்கள் அளித்த மனுவில், உடையார்பட்டி பொது மந்தையை அரசு கையகப்படுத்தி அரசு அலுவலகம், பூங்கா அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். வக்கீல்கள் செல்வம், அசோக், சாந்தி ஆகியோர் அளித்த மனுவில், கொக்கிரகுளம் பாசன கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்'' என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இதே போல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் வழங்கினார்கள்.