தம்மம்பட்டியில் மரம் விழுந்து இலங்கை அகதி பலி

தம்மம்பட்டியில் மரம் விழுந்து இலங்கை அகதி உயிரிழந்தார். உடலை இடமாற்றி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-22 22:32 GMT

தம்மம்பட்டி:

மரம் விழுந்து அகதி பலி

தம்மம்பட்டி போக்குவரத்து பணிமனை எதிரில் நூற்றாண்டு பழமை வாய்ந்்த புளியமரம் இருந்தது. சாலையை அகலப்படுத்துவதாக கூறி அந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி நடந்தது. நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த தொழிலாளி உத்தமசீலன் (வயது 40) என்பவர் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக உத்தமசீலன் மீது மரம் விழுந்தது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அங்கிருந்தவர்கள் மரத்தை அகற்றி, அவரது உடலை மீட்டு, அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் போக்குவரத்து பணிமனை செல்லும் பாதையில் வைத்தனர்.

பரபரப்பு

இது பற்றி தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மரத்தை வெட்டி அகற்ற உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அனுமதி பெறாமல் மரத்தை வெட்டியதால், அதை மறைப்பதற்காக இறந்த உத்தமசீலனின் உடலை இடமாற்றி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதை அறிந்த இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அகதிகள் ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் போலீசாரிடம், மரம் விழுந்ததால் இறந்தவரின் உடலை ஏன் இடமாற்றி வைத்தனர்?. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

விசாரணை

தொடர்ந்து ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா உத்தரவின் பேரில் கெங்கவல்லி தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் பலியான உத்தமசீலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்