ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும்

செம்பனார்கோவில் அருகே சாலையில் உள்ள ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-22 18:45 GMT

பொறையாறு:

செம்பனார்கோவில் அருகே சாலையில் உள்ள ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதான சாலை

மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவில் வழியாக ஆக்கூர் முக்கூட்டு வரை செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவில், திருவிடைக்கழி பாலசுப்பிரமணியர் கோவில், தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு மணி மண்டபம் உள்ளது.

இது தவிர வரலாற்று புகழ் பெற்ற தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தரங்கம்பாடி தாலுகா அலுவலகம், கருவூலம், பொறையாறு போலீஸ் நிலையம், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்கள் உள்ளன.

2 இடங்களில் ஆபத்தான வளைவு

மேற்கண்ட இடங்களுக்கு பொதுமக்களும், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். எனவே இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்த நிலையில் மேற்கண்ட சாலையில் காளகஸ்திநாதபுரத்தில் 2 இடங்களில் ஆபத்தான வளைவு உள்ளது.

இந்த வளைவின் இருபுறமும் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் வேகமாக திரும்பும்போது விபத்து ஏற்படுகிறது. எனவே, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் உள்ள ஆபத்தான வளைவில் விபத்தை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்