நெல்லை: மாற்றுத்திறனுடைய குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.7¾ லட்சத்தில் சிறப்பு பூங்கா

பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்காக ரூ.7.¾ லட்சம் மதிப்பில் சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதை கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்.

Update: 2022-09-28 11:41 GMT

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள பழைய செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கணிணி பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தசைகுறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகளை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்காக ரூ.7 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் பழைய செஞ்சிலுவை சங்க வளாகத்தில் சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த பூங்காவில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,

இங்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாடவும் அவர்கள் உடல் ரீதியான பயிற்சி பெறவும் விளையாட்டு சாதனங்களுடன் பயிற்சி அளிக்க புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இந்த பூங்காவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 5வயது முதல் 14 வயது வரையிலான மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளருடன் வந்து விளையாடலாம்.

இந்த பூங்காவில் விளையாடுவதன் மூலம் மாற்று திறன் குழந்தைகள் உடல் தசைகள் சிறு சிறு செயல்பாடுகள் கொடுப்பதனால் அவர்களுக்கு உற்சாகமும் உடல் ரீதியான மாற்றமும் கிடைக்கிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், புஷ்பலதா கல்வி குழும தலைவர் புஷ்பலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்