மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் கூடுதல் இருக்கை வசதிகள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-06-08 10:16 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் கூடுதல் இருக்கை வசதிகள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மருத்துவ முகாம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார்.

முகாமில் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய பராமரிப்பாளர்களுடன் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை புதிதாக பெறுவதற்கும், புதுப்பித்துக் கொள்ளவும் நேரடியாக விண்ணப்பித்தனர்.

அப்போது சிறப்பு மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்தனர்.

கூடுதல் இருக்கைகள்

இந்த முகாமிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பலர் வந்தனர்.

அப்போது மருத்துவ பரிசோதனை நடைபெற்ற பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் அமர போதிய இட வசதி இல்லாததால் அவர்கள் தரையில் அமர்ந்து இருந்தனர்.

இம்முகாமிற்கு பெரும்பாலும் கால் சரியில்லாதவர்களே வந்திருந்தனர். அவர்களால் உடனே எழுந்து நடந்து செல்ல முடியாத நிலையில் காணப்பட்டனர்.

எனவே மாற்றுத் திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு முகாம் நடைபெறும் நாளன்று அவர்களுக்கு தேவையான கூடுதல் இருக்கை வசதிகள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்