திருவள்ளூரில் விவசாயிகளுக்கு சிறப்பு ஆய்வுக்குழு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு ஆய்வுக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-07-24 07:11 GMT

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் 30 உற்பத்தியாளர் நிறுவனங்களின் அரசு துறை அலுவலர்கள், விவசாய உற்பத்தி நிறுவன இயக்குனர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சிறப்பு ஆய்வு குழு கூட்டம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன், வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் ஒன்றுபட செயல்பட்டு உழவர் சந்தைகளில் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை கொள்முதல் செய்து சில்லறை விற்பனை செய்யும் பாலமாக செயல்பட வேண்டும்.

இடுப்பொருள் விற்பனை செய்வதோடு உறுப்பினர்களது விளைப்பொருட்களை கொள்முதல் செய்து தரம் பிரித்து பிரிண்டிங் செய்து விற்க தேவைப்படும் எந்திரங்கள் மற்றும் தளவாடங்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், வேளாண் உட்கட்டமைப்பு நிதி போன்ற திட்டங்களை பயன்படுத்தி வலுப்படுத்திக் கொள்ளவும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் சிறு தானியங்களை நியாய விலை கடைகள், பிளிப்கார்ட் மற்றும் உழவர் சந்தைகளில் விநியோகிக்க முனைப்பு காட்ட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் கலெக்டர் ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு நுகர்வோருக்கு தரமான மதிப்பு கூட்டிய பொருட்களை உற்பத்தி செய்து தங்களது உறுப்பினர்களுக்கும் பிற விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில் திறம்பட செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்