மின்இணைப்புடன் ஆதார் இணைக்க சிறப்பு முகாம் தொடங்கியது

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சேலம் மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் தொடங்கியது.

Update: 2022-11-28 22:24 GMT

சிறப்பு முகாம்கள்

தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று மின்வாரியத்துறை அறிவித்துள்ளது. இதற்காக பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்தும் மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்கள் தொடங்கின.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சேலம் மற்றும் மேட்டூர் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் நேற்று சிறப்பு முகாம்கள் தொடங்கின.

அப்போது, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்களை இணைக்க மின்நுகர்வோர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் எண்களை இணைத்தனர். இதற்காக தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

நீண்ட வரிசையில்...

சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, நெத்திமேடு, கிச்சிப்பாளையம், சூரமங்கலம், கொண்டலாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகங்களில் நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மின் இணைப்புடன் ஆதார் அட்டையை கொண்டு வந்து எண்களை இணைத்தனர்.

அம்மாப்பேட்டை மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமை கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் குணவர்த்தினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் அந்தந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் ஆதார் எண் சேர்க்கும் சிறப்பு முகாம்களை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்