கேரளாவுக்கு கடத்தி சென்று விற்கப்பட்ட கோவில் காளை

காவேரிப்பட்டணம் அருகே கேரளாவுக்கு கடத்தி சென்று விற்கப்பட்ட கோவில் காளையை மீட்டு கிராமமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

Update: 2023-10-08 18:40 GMT

காவேரிப்பட்டணம்

கோவில் காளை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள குடிமேனஅள்ளி கிராமத்தில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான காளை இருந்தது. இந்த காளையை கிராம மக்கள் பராமரித்து சாமியாகவே வழிபட்டு வந்தனர். இந்த கோவில் காளை திடீரென காணவில்லை. இதனால் கிராம மக்கள் பல்வேறு இடங்களில் காளையை தேடினர்.

அப்போது கோவில் காளையை மர்ம நபர்கள் வேனில் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் காளையை தேடினர். காளையை ஏற்றி சென்ற வேன் ஊத்தங்கரை அருகே உள்ள ரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த நபருக்கு சொந்தமானது என தெரிந்தது. அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

அப்போது மாடு ஏற்ற வேண்டும் என்று கூறி வாடகைக்கு வேனை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அழைத்து சென்றதாக கூறினார். அந்த கிராமத்திற்கு சென்று வாலிபர் ஒருவரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அவர் ரெட்டிப்பட்டியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 27) என்பதும், காளையை வேனில் கடத்தி கேரளாவில் இறைச்சிக்காக விற்றதும் தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் இதுகுறித்து பாரூர் போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து புஷ்பராஜை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கேரளாவில் இருந்து கோவில் காளையை மீட்டு கிராம மக்களிடம் ஒப்படைத்தனர்.

சிறப்பு பூஜை

இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் காளையை ஆற்றில் குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்