விராலிமலையில் குடிநீர் தொட்டியின் மீது ஏறி சமூக ஆர்வலர் உண்ணாவிரதம்

விராலிமலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி சமூக ஆர்வலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2023-02-16 17:43 GMT

ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா கொடும்பாளூர் சத்திரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 69). சமூக ஆர்வலரான இவர், அதே பகுதியில் உள்ள சத்திர ஊரணியில் சிலர் வீடுகள் மற்றும் கடைகளை கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி கடந்த 2016-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் முடிவில் 2017-ம் ஆண்டு 12 வாரத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றாததால் செல்வராஜ் மீண்டும் 2018-ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மீண்டும் நீதிமன்றம் அறிவித்ததையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வருவாய், வட்டார வளர்ச்சி மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். அப்போது அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி கால அவகாசம் கேட்டதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

குடிநீர் தொட்டியின் மீது ஏறி உண்ணாவிரதம்

இதற்கிடையில் ஒரு தரப்பினர் கீரனூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதாக கூறுகின்றனர். இதனால் அதிகாரிகள் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றப்படாமல் இருந்து வந்தனர். மேலும் பலநாட்கள் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகளிடம் காண்பித்து நடவடிக்கை எடுக்க கூறியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் இன்று காலை நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்பை அகற்றாமல் காலதாமதம் ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை கழுத்தில் மாட்டிக் கொண்டு தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் செல்வராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் செல்வராஜ் போராட்டத்தை தொடர்ந்தார். இதற்கிடையில் தகவலறிந்து அங்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் செல்வராஜிற்கு தெரியாத வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறினர். பின்னர் செல்வராஜிற்கு பின்னால் சென்று லாவகமாக அவரை மீட்டு பத்திரமாக கீழே இறக்கி கொண்டு வந்தனர்.

பரபரப்பு

இதைத்தொடர்ந்து செல்வராஜை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்குவந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் செல்வராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நீதிமன்ற வழக்கின் தற்போதைய நிலைமை குறித்து விபரம் பெறப்பட்டு அதனடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் தொடர்பாக மேல்நடவடிக்கை தொடரப்பட்டு ஒருவார காலத்திற்குள் அதற்கான விபரம் தெரிவிக்கப்படுவதாக கூறினர். இதையடுத்து செல்வராஜ் அங்கிருந்து சென்றார்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேலே ஏறி சமூக ஆர்வலர் 1 மணி நேரத்திற்கு மேலாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய சம்பவம் விராலிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  

Tags:    

மேலும் செய்திகள்