வேடசந்தூரில் துணி துவைக்கும் எந்திரத்துக்குள் பதுங்கியிருந்த 7 அடி நீள பாம்பு
வேடசந்தூரில் துணி துவைக்கும் எந்திரத்துக்குள் பதுங்கியிருந்த 7 அடி நீள பாம்பு பிடிபட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யனார்நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). டிரைவர். அவருடைய மனைவி கல்பனா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை கணவன்-மனைவி 2 பேரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டனர். அவர்களது குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது அவர்களது வீட்டின் முன்பக்க வளாகத்தில் சுமார் 7 அடி நீள சாரை பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களது குழந்தைகளை எச்சரித்து வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு உள்ளே இருக்குமாறு கூறினர். மேலும் இதுகுறித்து சீனிவாசன், வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். அப்போது வீட்டின் வளாகத்தில் இருந்த பாம்பை காணவில்லை. இதனால் அப்பகுதியை சுற்றிலும் பாம்பை தேடி பார்த்தனர். அப்போது வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த துணி துவைக்கும் எந்திரத்துக்குள் பாம்பு பதுங்கியிருந்ததை தீயணைப்பு படையினர் பார்த்தனர். பின்னர் அவர்கள், அந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். மேலும் அதனை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர். வீட்டுக்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.