மரத்தில் தொங்கிய பாம்பு
நத்தம் குடியிருப்பு பகுதியில், மரத்தில் தொங்கிய பாம்பை தீயணைப்பு படையினர் மடக்கி பிடித்தனர்.
நத்தம் தேவதாஸ் நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது 35). இவரது வீட்டின் அருகே வேப்பமரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் பாம்பு ஒன்று தொங்கி கொண்டிருந்தது. இதனைக்கண்ட சாந்தி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் திருக்கோல்நாதர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், மரத்தில் தொங்கி கொண்டிருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். அது 6 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு ஆகும். அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.