திருமண தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு

தோகைமலை அருகே திருமண தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-06-20 18:43 GMT

திருமணம்

தோகைமலை அருகே போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி குள்ளம்பட்டியை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 58), விவசாயி. இவருடைய மனைவி தங்கமணி. இவர்களுடைய மகள் அபிநயா. இந்தநிலையில் நெடுஞ்செழியன் தனது மகள் அபிநயாவை அதே ஊரில் வசிக்கும் தனது தங்கையின் மகன் கலையரசனுக்கு கடந்த 1-ந்தேதி திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதற்கு அவருடைய மனைவி தங்கமணி மற்றும் அவருடைய தந்தை செம்பாறைபட்டி பெருமாள், சகோதரர் சக்திவேல் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்செழியனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் நெடுஞ்செழியன் தனது மகள் அபிநயா வீட்டிற்கு சென்றுள்ளார்.

அரிவாள் வெட்டு

நேற்று முன்தினம் நெடுஞ்செழியன் குள்ளம்பட்டியில் உள்ள குமார் என்பவரின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சக்திவேல், தங்கமணி, பெருமாள், குமார் ஆகியோர் நெடுஞ்செழியனிடம் அபிநயா திருமணம் குறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் நெடுஞ்செழியனை தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளால் தலை மற்றும் கைகளில் வெட்டினர்.

இதில் காயம் அடைந்த நெடுஞ்செழியனை அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து நெடுஞ்செழியன் அளித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் சக்திவேல், தங்கமணி, பெருமாள், குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்