வடமலைக்குறிச்சி சந்திப்பில் சேவை ரோடு அமைக்க வேண்டும்
விருதுநகர் நான்கு வழிச்சாலையில் வடமலைக்குறிச்சி சந்திப்பில் சேவை ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
விருதுநகர் நான்கு வழிச்சாலையில் வடமலைக்குறிச்சி சந்திப்பில் சேவை ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
சேவை ரோடு
இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி வடமலைகுறிச்சி சந்திப்பில் நான்கு வழிச்சாலையில் சேவை ரோடு அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது உடனடியாக சேவை ரோடு அமைக்கப்படும் என்றும் அதுவரை தற்காலிகமாக தற்போது உள்ள சாலையில் மின்விளக்கு அமைத்து சீரமைக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைஆணைய அதிகாரிகள் விருதுநகர் எம்.எல்.ஏ. முன்னிலையில் உறுதி அளித்தனர்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக சேவை ரோடு பணியை தொடங்கவும், அதுவரை தற்காலிக சாலையை சீரமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பொதுப்பாதை
திருச்சுழி யூனியன் பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில் உள்ள அருந்ததியர் சமுதாய மக்கள் தங்கள் பகுதியில் உள்ள பொதுப்பாதை பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு கொடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் வேல்முருகன், தமிழகம் முழுவதும் அனைத்து சாராய சாவுகளை தடுக்கவும், பனை விவசாயம் பயன்பெறும் பொருட்டு மாநிலம் முழுவதும் கள் கடைகளை திறக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மனு கொடுத்துள்ளார்.
பாடப்புத்தகம்
தேச மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பரத்ராஜா பள்ளி பாடப்புத்தகங்களில் மது மற்றும் போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் அதனால் ஏற்படும் சமூக பிரச்சினைகள் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறி எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அனுப்பியுள்ளார்.