அம்பையில் தொடர் விபத்து; பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் காயம்
அம்பையில் நடந்த தொடர் விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
அம்பை:
அம்பையில் இருந்து பாபநாசம் நோக்கி நேற்று காலை டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரிக்கு பின்னால் அம்பை, கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றிக்கொண்டு அகஸ்தியர்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.
ஆட்டோவை கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஷேக் சித்தா மதார் (வயது 36) என்பவர் ஓட்டினார். அப்போது முன்னால் சென்ற லாரி, திடீரென திரும்பியதாக கூறப்படுகிறது. இதில் லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த 2 மாணவர்கள், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஆகியோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து மாணவர்கள் முதலுதவி பெற்று வீடு திரும்பினர். இருப்பினும் ஆட்டோ பெரும் சேதமடைந்தது. இதுதொடர்பாக அம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.