'போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்' - சரத்குமார்

இரக்கமற்ற, கொடூர சமூகக்குற்றங்களுக்கு போதைப் பழக்கம்தான் காரணமாக இருக்கிறது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-06 17:05 GMT

சென்னை,

போதை எனும் கொடிய அரக்கனை சமூகத்தில் இருந்து முற்றிலும் ஒழித்து, நிரந்தரத்தீர்வு காண்பதற்கு, போதைப்பொருள் கடத்தல், விற்பனை உள்ளிட்ட குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு காலதாமதமின்றி உச்சபட்சமாக மரண தண்டனை வழங்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என ச.ம.க. தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"கடந்த வாரம் டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்ததில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்துள்ளதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் தடுப்புக்கான ஆதங்க குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளன.

13.12.2022 அன்று சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி, மது மற்றும் போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும் என தொடர்ந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போராடி வருகிறது. போதைப் பொருட்களால் குழந்தைகளும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், இளைய தலைமுறையினரும் பெரிதும் பாதிக்கப்படுவதை அரசு தீவிரமாக கண்காணிக்க தவறிவிட்டது.

கடந்த இரண்டு மாதங்களில், 470 பேர் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டதாகவும், இவர்களிடம் இருந்து 1914 கிலோ கஞ்சா உட்பட, 24 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வெளிவரும் செய்திகள் மூலம் தமிழ்நாட்டில் போதைப்பொருளின் தீவிர நடமாட்டம் உறுதியாகியுள்ளது.

போதை பொருட்கள் பயன்பாட்டால், மனித உயிரிழப்பு ஏற்பட்டு குடும்பங்கள் அநாதையாகிவருவது ஒருபுறம் தீராத மனவேதனையளிக்கிறது. மறுபுறம், மனிதர்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் மனித உறுப்புகள் செயலிழந்து, உறுப்புமாற்று சிகிச்சை பெற முடியாமல் செயலிழந்து முடக்கப்படுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் ஒரு தலைமுறையே அழியும் சூழல் உருவாகிவிடும்.

வசதிபடைத்தவர்கள் போதைக்கு அடிமையாகி உடல்நலம் சீர்கெட்டு போனாலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில் இருப்பார்கள். ஆனால், சாமானிய மனிதன் போதைக்கு அடிமையானால், மருத்துவ சிகிச்சைக்கு வழியின்றி, நடுத்தெருவில் குடும்பத்தை நிர்கதியாக விட்டுச்செல்லும் நிலைதான் நடந்து கொண்டிருக்கிறது.

அக்குடும்பத்திற்கு தற்காலிக நிவாரணம் வழங்கி அரசு சமன் செய்ய முயன்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அது நிரந்தரத் தீர்வாகாது. தேசத்தின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பும், ஒருமித்த சக்தியும் செயலிழக்கும் வகையில், அவர்களது மூளைகளை மழுங்கடிக்கச் செய்து, தன்னிலை மறந்து, குடும்பங்களை மறந்து, உறவுகள், நண்பர்களை மறந்து, சமூக அக்கறை, நாட்டுப்பற்று இல்லாமல் போதைக்கு அடிமையாக்கி உயிர் பறிக்கும் செயலும் ஓர் வகையான இனப்படுகொலையாகும்.

போதையால், தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் துன்புறுத்துவது மட்டுமல்லாமல், எத்தனை எத்தனை கடுமையான, இரக்கமற்ற, கொடூர சமூகக்குற்றங்களுக்கு போதை காரணமாக இருக்கிறது என்பதை ஏன் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் சிந்திக்கவில்லை. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிகளவு போதை புழக்கத்தில் இருக்கிறது என்பது தமிழர்கள் அனைவருக்கும் தலைகுனிவான செய்தி.

இந்த அளவுக்கு போதையை வளர விட்டார்கள் யார்? உயிர்காக்கும் வாகனத்தில் கூட உயிரை பறிக்கும் போதைபொருள் கடத்தல் நடக்கிறது என்றால் எந்த அளவிற்கு சுயலாபத்திற்காக சமுதாயத்தில் சில கயவர்கள் தரம் தாழ்ந்துவிட்டார்கள். அரசியல் பின்புலம், அதிகாரிகள் பின்புலம் இல்லாமல் போதை பொருள் விற்பனை, கடத்தல்கள் நடைபெற சாத்தியமில்லை.

சமீபத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வரும் காவல்துறையின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும், காவல்துறையில் செயல்படும் அத்தனை பிரிவு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து, பல உயிர்களை பலி கொடுக்க துணிந்த கயவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

தமிழ்க்குடும்பங்களையும், சமூகத்தையும் பாதுகாத்து, சமூகவளர்ச்சியை பிரதானப்படுத்த, மத, மொழி, இனங்கள் கடந்து, ஆட்சியாளர்கள், அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துறந்து இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு தமிழக மக்களும் ஜனநாயகத்தில் ஒருவராக போதையால் சீர்கெட்டு செல்லும் இளைய சமுதாயத்தை காப்பாற்ற ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

இந்த போதை எனும் கொடிய அரக்கனை சமூகத்தில் இருந்து முற்றிலும் ஒழித்து, நிரந்தரத்தீர்வு காண்பதற்கு, போதைப்பொருள் கடத்தல், விற்பனை உள்ளிட்ட குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு காலதாமதமின்றி உச்சபட்சமாக மரண தண்டனை வழங்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்