அரிசி வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; 5 பேர் கைது

நன்கொடை தரமறுத்த ஆத்திரத்தில் அரிசி வியாபாரியை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-28 18:02 GMT

நன்கொடை தரமறுத்த ஆத்திரத்தில் அரிசி வியாபாரியை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரிசி வியாபாரி

திருச்சி பீமநகர் யானைகட்டிமைதானம் பகுதியை சேர்ந்தவர் சிவநேசன் (வயது 60). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் இருந்து பாலக்கரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பீமநகர் மேம்பாலத்தின் கீழ் அவரை வழிமறித்த ஒரு கும்பல் திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சிவநேசன் அலறி துடித்து மயங்கி விழுந்தார்.

அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியினர் ஓடி வந்தனர். உடனே அவரை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சிவநேசனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

5 பேர் கைது

பின்னர் இது தொடர்பாக லால்குடி நடராஜபுரத்தை சேர்ந்த கலைப்புலிராஜா (27), தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த வீரமணி (26), முசிறியை சேர்ந்த அமர்நாத் (24), மருதாண்டக்குறிச்சி ஆளவந்தான்நல்லூரை சேர்ந்த பரமகுரு (22), திருச்சி கீழமாங்காவனத்தை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் தேவேந்திரகுல வேளாளர் அமைப்பு சார்பில் நன்கொடை வசூல் செய்ய சிவநேசனிடம் நிதி கேட்டதாகவும், அதற்கு அவர் தரமறுத்ததால் அவரை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்