பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; பொருட்கள் அடித்து உடைப்பு
கொள்ளிடம் அருகே சொத்து பிரச்சினையில் பெண்ணை அரிவாளால் வெட்டி பொருட்களை அடித்து உடைத்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் நடந்தது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே சொத்து பிரச்சினையில் பெண்ணை அரிவாளால் வெட்டி பொருட்களை அடித்து உடைத்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் நடந்தது.
சொத்து பிரச்சினை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது38).கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியா (32). இவர்கள் வசித்து வரும் இடம் குடும்ப சொத்து என்பதால் பாகப்பிரிவினை பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக மணிமாறன் சீர்காழி கோா்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளாா்.
இந்நிலையில் மணிமாறனின் அண்ணன்களான சண்முகம், இளங்கோவன் மற்றும் இருவரின் மனைவிகள் மாரியம்மாள், கிருஷ்ணவேணி ஆகிய 4 பேரும் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை மணிமாறன் வீ்ட்டுக்கு சென்றனர்.
அரிவாள் வெட்டு
அங்கு அவர்கள் வீட்டில் இருந்த மணிமாறனின் 3 வயது மகளை வலுக் கட்டாயமாக தூக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதை மணிமாறன் மற்றும் அவரின் மனைவி பிரியா தடுக்க முயன்றனர். அப்போது பிரியாவுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த பிரியா மயங்கி விழுந்தார்.
மேலும் மணிமாறனின் அண்ணன்களான சண்முகம், இளங்கோவன் மற்றும் இருவரின் மனைவிகள் மாரியம்மாள், கிருஷ்ணவேணி ஆகிய 4 பேரும் சேர்ந்து அங்கு இருந்த குடிநீர் அடி பம்பு மற்றும் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த பிரியாவுக்கு சொந்தமான கன்றுக்குட்டியை துடிக்க, துடிக்க அடித்துக் கொன்றனர்.
சாலை மறியல்
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கொள்ளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவான சண்முகம், இளங்கோவன் மற்றும் இருவரின் மனைவிகள் உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகின்றனர். இந்தநிலையில் சண்முகம், இளங்கோவன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்யக்கோரி மணிமாறனின் உறவினர்கள் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் கொள்ளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.