தாறுமாறாக ஓடிய மினிபஸ் மோதி பள்ளி மாணவன் காயம்

தாறுமாறாக ஓடிய மினிபஸ் மோதி பள்ளி மாணவன் காயம்

Update: 2023-03-31 19:30 GMT

தஞ்சையில் தாறுமாறாக ஓடிய மினிபஸ் மோதி பள்ளி மாணவன் காயம் அடைந்தான். 15 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம் அடைந்தது.

தாறுமாறாக ஓடிய மினிபஸ்

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவக்கல்லூரியை நோக்கி தனியார் மினிபஸ் ஒன்று நேற்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த மினிபஸ்சை வல்லத்தை சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி சென்றார். மினிபஸ்சில் 15-க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த மினிபஸ் மருத்துவக்கல்லூரி சாலையில் பாலாஜிநகர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி மினிபஸ் தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 15 மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், மின் கம்பம் மீதும், அடுத்து கார் மீதும் மோதி நின்றது. இதனால், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், கார் ஆகியவை சேதமடைந்தன. மின் கம்பம் முறிந்து சாய்ந்தது.

பள்ளி மாணவன் காயம்

மேலும், சாலையோரம் நின்று கொண்டிருந்த பிள்ளையார்பட்டி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பிரகாஷ் ராஜ் (வயது14) என்ற பள்ளி மாணவன் பலத்த காயம் அடைந்தார். இவரை தவிர பெண் ஒருவரும் லேசாக காயம் அடைந்தார். இவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து விசாரணை பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், மோகன், ஏட்டு ரெகுநாத், போலீஸ்காரர் குணா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மினிபஸ் டிரைவர் செந்திலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கார், 6 மோட்டார் சைக்கிள்கள் உரிமையாளர்கள் மட்டுமே புகார் கொடுத்தனர். மற்ற வாகனங்களின் உரிமையாளர்கள், லேசான சேதம் என்பதால் புகார் கொடுக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்