5 ஆண்டுகளாக பல்நோக்கு சேவை மையத்தில் செயல்படும் பள்ளி
ஆறுகாட்டுத்துறையில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் 5 ஆண்டுகளாக பல்நோக்கு சேவை மையத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
ஆறுகாட்டுத்துறையில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் 5 ஆண்டுகளாக பல்நோக்கு சேவை மையத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம்
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியினர் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 145 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 2006-ம் ஆண்டு கட்டப்பட்ட இப்பள்ளி கட்டிடம் தற்போது சேதமடைந்து உள்ளது. மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. வகுப்பு அறையில் ஜன்னல் மற்றும் நிலைக்கதவு உள்ளிட்ட சேதம் அடைந்துள்ளன. மழை காலத்தில் பள்ளிக்குள் தண்ணீர் ஒழுகி வந்தது.
சேவை மையத்தில் செயல்படுகிறது
இந்த பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் 2017-ம் ஆண்டு முதல், அருகில் உள்ள பல்நோக்கு சேவை மையத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மாணவ-மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். பழைய பள்ளி கட்டிடத்தில் உடைந்த பொருட்களை குவித்து வைத்துள்ளனர். .
இந்த நிலையில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் இந்த மையத்தில் தங்க வைப்பதால் மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை விடும் நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது.
புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்
பழைய பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தார்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.