பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய மணல் லாரி

காட்பாடியில் மதிநகருக்கு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒரு மணல் லாரி சிக்கி சாய்ந்தது.

Update: 2022-09-27 16:24 GMT

காட்பாடியில் மதிநகருக்கு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒரு மணல் லாரி சிக்கி சாய்ந்தது. இதனால் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதிநகர் சாலை

காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகே மதிநகர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் பாலாஜி நகர், அண்ணாமலை நகர், அருப்புமேடு, எம்.ஜி.ஆர்.நகர், சத்யா நகர், ஹவுசிங் போர்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் தினமும் சென்று வருகின்றனர்.

வியாபாரிகள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் என தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சாலை வழியாகத்தான் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த சேறும், சகதியுமான சாலையில் சிலர் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர்.

லாரி சிக்கியது

இந்த சாலையில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதனை சரியாக மூடவில்லை. கடந்த சில நாட்களாக காட்பாடி பகுதியில் மழை பெய்ததால் பள்ளத்தில் மழை நீர் குட்டை போல் தேங்கியுள்ளது.மேலும் அருகில் உள்ள பகுதி சேறும், சகதியமாக உள்ளது. இதனால் மக்கள் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  மணல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இந்த பள்ளத்தில் சிக்கி சாய்ந்தது. இதனால் லாரி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி வழியாக செல்ல மக்கள் அச்சப்பட்டனர். காட்பாடி ரெயில்வே மேம்பாலம் மூடப்பட்ட போது இந்தசாலைதான் மாற்று பாதையாக இருந்தது.

எனவே குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியமாகவும் உள்ள இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். இந்த சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்