பரமத்தி அருகே சலூன்கடைக்காரர் தற்கொலை

பரமத்தி அருகே சலூன்கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-03 18:45 GMT

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் கணபதி (வயது 31). இவருடைய மனைவி மவுனிகா (21). இவர் கீழ்பரமத்தியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். கணபதி பரமத்தியில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த விபத்தில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த அவர் தினமும் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கணபதி நேற்று முன்தினம் வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அவரது வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கணபதி வீட்டில் இருந்த விட்டத்தில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் பரமத்தியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கணபதியின் உடலை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்