சமஸ்கிருத மந்திரங்களை தெளிவாக உச்சரித்து வழிபாடு செய்த ரஷ்ய தம்பதி

நல்லாடை சுந்தரநாயகி அக்னீஸ்வரர் கோவிலில் சமஸ்கிருத மந்திரங்களை தெளிவாக உச்சரித்து ரஷ்ய தம்பதியினர் வழிபாடு செய்தனர்.

Update: 2023-05-28 18:45 GMT

பொறையாறு:

நல்லாடை சுந்தரநாயகி அக்னீஸ்வரர் கோவிலில் சமஸ்கிருத மந்திரங்களை தெளிவாக உச்சரித்து ரஷ்ய தம்பதியினர் வழிபாடு செய்தனர்.

ரஷ்ய தம்பதி

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த அலெக்சி என்கிற மித்ரானந்த தேவ் அவரது மனைவி மாயா. இவர்கள் ரஷ்யா நாட்டில் இந்து மதத்தை பரப்பும் ஆன்மிக பணிசெய்து வருகின்றனர். அந்த நாட்டில் மென்பொருள் பணியாளராக வேலை பார்த்து வந்தாலும் இந்தியா மற்றும் தமிழ் கலாச்சாரம் ஆகியவற்றை அறிந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா வந்தவர்கள் ஒவ்வொரு ஆன்மிக தலமாக சென்று வர ஆரம்பித்தனர்.

வருடம் தோறும் விடுமுறை நாட்களில் தமிழகத்திற்கு வருகை தந்து கோவில்களில் வழிபாடு நடத்துவதை வழக்கமாகவும் கொண்டுள்ளனர். இவர்கள் தங்களுடைய மூன்று வயது மகளுடன் திருநள்ளாறு, வைத்தீஸ்வரன் கோவில் திருவெண்காடு ஆகிய கோவில்களில் தரிசனம் செய்துவிட்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பொறையாறு அருகே நல்லாடையில் பரணி நட்சத்திர காரர்களுக்கு பரிகார தலமாக விளங்கி வரும் சுந்தர நாயகி அக்னீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தெளிவாக உச்சரித்து வழிபாடு

கோவில் பிரகாரங்களில் இந்து முறைப்படி வழிபாடு செய்து, கருவறை முன்பு தியானத்தில் அமர்ந்து சமஸ்கிருத மொழியில் மகா மிருத்திஞ்சய மந்திரம் , நவகிரக காயத்ரி மந்திரங்கள் முருகன் தன்வந்திரி உள்ளிட்ட மூல மந்திரங்கள் ஆகியவற்றை கண்ணை மூடி தெளிவான உச்சரிப்புடன் வேதம் படித்த சாஸ்திரிகளுக்கே சவால் விடும் வகையில் சுவாமி தரிசனம் செய்தது பிற பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக ரஷ்ய தம்பதிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் விழாக்குழு தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து பரிவட்டம் கட்டி வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்