சென்னிமலையில் ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது; கல்லூரி மாணவர் உயிர் தப்பினார்
சென்னிமலையில் ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது; கல்லூரி மாணவர் உயிர் தப்பினார்
சென்னிமலை
சென்னிமலை மணிமலை காளிக்கோப் நகரை சேர்ந்தவர் சண்முகம். அவருடைய மகன் கவின் (வயது 23). இவர் ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் காருக்கு கியாஸ் நிரப்புவதற்காக நேற்று மாலை 3 மணி அளவில் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னிமலையில் உள்ள கியாஸ் 'பங்க்' க்கு சென்று கொண்டிருந்தார். அறச்சலூர் ரோடு அம்மாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது காருக்கு அடியில் இருந்து புகை வந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து கவினிடம் கூறி எச்சரித்தனர். உடனே அவர் காரை ரோட்டோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கி உயிர் தப்பினார். அப்போது காரில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சென்னிலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.