விமான நிலையம் அமைக்க மீண்டும் ஆய்வு நடத்தப்படும்

குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என மத்திய இணை மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-15 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என மத்திய இணை மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

சுரங்கப்பாதை பணி

நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி.கே.சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது இந்த பணி எப்போது முடிவடையும்? என ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு 6 மாதத்தில் பணி முடிக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் இந்த பணியை முடிக்க 6 மாதம் எடுத்துக் கொள்ளாமல் விரைவில் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி வி.கே.சிங் அறிவுரை கூறினார்.

கன்னியாகுமரியில் விமான நிலையம்...

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை வளம் நிறைந்த மாவட்டமாகும். இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இங்கு விமான நிலையம் அமைந்தால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஏற்கனவே கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாமிதோப்பு பகுதியில் இடமும் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மீண்டும் மத்திய அதிகாரிகள் குழு வருகை தந்து ஆய்வு செய்ய உள்ளனர். அவர்களின் அறிக்கைப்படி விமான நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கு அமைப்பது என முடிவு செய்யப்படும்.

நான்கு வழிச்சாலை பணி

நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரையிலும் நான்குவழி சாலை பணி வருகிற ஜூலை மாதம் தொடங்க உள்ளது. இதற்காக ரூ.1,041 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 வருடத்தில் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக சில நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டியது உள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்டு இந்த பணி 2½ வருடத்திற்குள் முடிக்கப்படும்.

கடந்த 9 ஆண்டுகளில் நாட்டுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பா.ஜ.க. கொடுத்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர். கொரோனா காலக் கட்டத்தில் நோய் தடுப்பு பணிகளை மத்திய அரசு சிறப்பாக கையாண்டது. அதேசமயம் பொருளாதாரத்தையும் வீழ்ச்சியடையாமல் பார்த்துக் கொண்டது.

அதேபோல வளர்ச்சி பெறாத கிராமங்களில் பல்வேறு கட்டமைப்புகளை மத்திய அரசு கொண்டு வந்து அந்த கிராமங்களை மேம்படுத்தி உள்ளது. 9 ஆண்டுகளில் நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் 55 சதவீதம் வந்துள்ளது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் முதலிடம்

வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தை இந்தியா அடையும். உலகிலேயே அதிக அளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட இந்தியா முன்னிலையில் உள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் 80 கோடி பேருக்கு மாதம் 5 கிலோ அரிசி இலவசமாக மத்திய அரசால் வழங்கப்பட்டது. தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பொன். ராதாகிருஷ்ணன் மந்திரியாக இருந்த போது ரூ.35 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், துணைத் தலைவர் தேவ், பொருளாளர் முத்துராமன், மாநில செயலாளர் மீனாதேவ், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, கோட்டார் ரெயில் நிலைய மேலாளர் முத்து மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்