நடைபால முகப்பில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்
நடைபால முகப்பில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலத்தில் உள்ள உச்சுவாடி கிராமத்திற்கும், அரிச்சந்திரபுரம் கடைவீதி பகுதிக்கும் அப்பகுதி மக்கள் சென்று வருவதற்கு ஏதுவாக, வெண்ணாற்றின் குறுக்கே நடை பாலம் கட்டப்பட்டது. இந்த நடை பாலத்தின் முகப்பில் இரண்டு பக்கமும் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டது. இதை சீரமைக்கவில்லை. மூங்கில் மரங்கள் கொண்டு தற்காலிகமாக தடுப்பு அமைக்கப்பட்டது. தற்போது அந்த தடுப்புகளும் சரிந்து விட்டன. தடுப்புச்சுவர் இல்லாததால், பாலத்தின் முகப்பில் மண் சரிவு ஏற்பட்டு அங்கு பள்ளம் ஏற்பட்டு வருகிறது. ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வரும் போது, பாலம் சரிந்து சேதம் அடையும் ஆபத்தும் உள்ளது. எனவே பாலத்தின் முகப்பில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.