நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

திருவெண்காடு அருகே புதுப்பிக்கப்பட்ட நூலகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? என்று வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-10-17 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னப்பன்பேட்டையில் ஊராட்சி நூலகம் உள்ளது. இதன்மூலம் வாசகர்களும், மாணவ-மாணவிகளும் அதிகளவு பயன்பெற்று வந்தனர். நாளடைவில் இந்த நூலகம் பழுதடைந்ததால் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது. இந்த நூலகத்தை புதுப்பித்து திறக்க வேண்டும் என்று அப்பகுதி வாசகர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையின்பேரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இந்த நூலகம் புதுப்பிக்கப்பட்டது.

திறக்கப்படவில்லை

ஆனால், இதுநாள் வரை இந்த நூலகம் திறக்கப்படாததால் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது. இதனால் நூலகத்திற்கு வந்து சென்ற வாசகர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் கிராமப்புற மாணவர்கள், புத்தகங்களை வாசிக்கும் இளைஞர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கிருந்து வெளியிடங்களில் உள்ள நூலகங்களுக்கு சென்றுதான் படித்து வருகின்றனர். ஆகவே, இந்த நூலகத்தை திறக்க வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், அன்னப்பன்பேட்டை நூலகத்திற்கு தினந்தோறும் அதிகஅளவில் வாசகர்கள் வந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து ஆர்வமுடன் படித்து வந்தனர். இந்த கட்டிடம் பழுதடைந்ததால் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை திறக்கப்படவில்லை. ஆகவே, இந்த நூலகத்தை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்