நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2022-09-12 16:03 GMT

நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், தனித்துணை கலெக்டர் ராஜமனோகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குணசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கந்தசாமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ரேஷன் கடை

தென்காசி தைக்கா தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறிஇருப்பதாவது:-

எங்களது பகுதியில் தனியார் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு எங்களது தெரு, ெரயில்வே பீடர் ரோடு, நம்பிராஜன் சாலை மற்றும் வாலியன் பொத்தை உள்ளிட்ட 13, 4 ஆகிய வார்டு பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகிறார்கள். இந்த இடம் 2 வார்டுகளுக்கும் மையப்பகுதியில் உள்ளது. தற்போது வேறொரு இடத்தில் புதிதாக ரேஷன் கடை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தைக்கா தெருவிலேயே நகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு அமைத்தால் பொதுமக்கள் அனைவரும் சென்று பொருட்களை வாங்குவதற்கு வசதியாக இருக்கும். எனவே வார்டுகளின் மையப் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் கடை அமைக்க கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திராவிட தமிழர் கட்சி

கலெக்டர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் கரு.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், "கடையநல்லூர் தாலுகா ஆய்க்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட தேசிய நகரில் 1998-ம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை மூலம் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் பொதுமக்களுக்கு பிற்கால பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமுதாய நலக்கூடம், தாமிரபரணி குடிநீர் வசதி, தெருக்களில் கழிவுநீர் ஓடை ஆகியன அமைத்து தர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 284 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. தொடர்ந்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவருக்கு பெட்ரோல் ஸ்கூட்டரை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்