பழ வியாபாரியின் கல்லாப்பெட்டியில் ரூபாய் நோட்டுகளை திருடி பதுக்கிய எலி

பழ வியாபாரியின் கல்லாப்பெட்டியில் ரூபாய் நோட்டுகளை திருடி பதுக்கிய எலி

Update: 2023-06-20 16:07 GMT

திருப்பூர்,

ஆசை யாரை விட்டது. அது மனிதனை மட்டுமல்ல பிற உயிர்களுக்கும் பொருந்தும் போலும். அதிலும் திருடுவதில் மனிதன் கில்லாடி என்றால், ஒரு எலி பணத்தை திருடி பதுக்கி வைப்பதில் பலே கில்லாடியாக இருந்திருக்கிறது.

பணத்தேவைக்காக கடைக்குள் புகுந்து பணத்தை திருடும் ஆசாமிகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் தினமும் கல்லாப்பெட்டியில் வைத்த ரூபாய் நோட்டுகளை நள்ளிரவில் ஒரு எலி திருடிக் கொண்டு போய் பதுக்கி வைத்த சம்பவம் திருப்பூரில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் மகேஷ் என்பவர் பழக்கடை வைத்துள்ளார். இரவில் கல்லா பெட்டியில் சிறிதளவு பணம் வைத்து விட்டு கடையை மகேஷ் பூட்டி செல்வது வழக்கம். மறுநாள் காலையில் கடையை திறந்து பார்த்தால் கல்லா பெட்டியில் வைத்திருந்த 10, 50, 100 ரூபாய் நோட்டுகள் காணாமல் போய் வந்தது. தொடர்ந்து இவ்வாறு நடந்ததால் மகேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பணத்தை பதுக்கிய எலி

பணம் எவ்வாறு காணாமல் போகிறது என்பதை கண்டுபிடிக்க கடைக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தினார். நேற்று காலை கடைக்கு வந்த மகேஷ், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அதிகாலை 4 மணி அளவில் கல்லா பெட்டி உள்ள மேஜை அருகே எலி ஒன்று அசால்டாக வந்தது. கல்லா பெட்டியில் சிறிய பிளாஸ்டிக் கூடையில் இருந்த 10, 50, 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் வாயால் கவ்விக்கொண்டு மேஜைக்கு அடியில் புகுந்து மறைந்தது.

கடைக்குள் இத்தனை பழம் இருக்க, அதை தின்னாமல் பணத்தை மட்டும் ஆட்டையை போட்டு சென்ற எலியை தேடும் பணியில் மகேஷ் ஈடுபட்டார். கடைக்குள் இருந்த பழங்களை வெளியே வைத்து பார்த்தபோது ஓரிடத்தில் எலி பதுங்கி இருந்தது. மகேசை பார்த்ததும் தலைதெறிக்க எலி ஓட்டம் பிடித்தது. அந்த இடத்தில் ரூபாய் நோட்டுகள் குவிந்து இருந்தன. அந்த நோட்டுகளை எண்ணிப்பார்த்தபோது அதில் ரூ.1,500 இருந்தது.

சினிமா பாணியில் சம்பவம்

பசித்தால் பழங்களை திருடாமல் பணத்தை மட்டும் அலேக்காக தூக்கிச்சென்று பதுக்கி வைத்த எலியை நினைத்து மகேஷ் அதிர்ச்சி அடைந்தாலும், எடுத்துச்சென்ற பணம் எதையும் அந்த எலி சேதப்படுத்தவில்லை. அப்படியே வைத்திருந்தது.

சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் நடிகர்கள் முரளி, வடிவேல் ஆகியோர் எலியிடம் சிக்கி படாதபாடு படுவதைப்போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். எலியின் சேட்டையை சினிமா என்ற நோக்கத்தில் பார்த்து சிரித்து சென்றிருப்போம். ஆனால் திருப்பூர் பழக்கடைக்குள் தினமும் பணத்தை திருடிய எலி, உரிமையாளரை தலை சுற்ற வைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. கடைக்குள் எலி பணத்தை எடுத்துச்செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்