தோட்டத்துக்குள் புகுந்த அபூர்வ ஆந்தை
நிலக்கோட்டை அருகே அபூர்வ ஆந்தை தோட்டத்துக்குள் புகுந்தது.
நிலக்கோட்டை அருகே உள்ள வீலிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வைரவன் (வயது 50). விவசாயி. இவர், தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த தோட்டத்தின் அருகே கடவகுறிச்சி மலை உள்ளது. அங்கிருந்து தண்ணீர் தேடி வந்த ஆந்தை ஒன்று வைரவன் தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அந்த ஆந்தை தோட்டத்திலேயே தங்கி விட்டது.
இதுகுறித்து நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு வைரவன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) ஜோசப் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் வைரவனின் தோட்டத்தில் சுற்றித்திரிந்த ஆந்தையை லாவகமாக பிடித்தனர். அந்த ஆந்தை கடவகுறிச்சி மலைப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில், பிடிபட்ட ஆந்தை, கழுகு போன்ற தோற்றத்தில் இருக்கிறது. இதனால் 'கழுகு ஆந்தை' என்று அழைக்கப்படுகிறது. இது, அரிய வகை பறவையினம் ஆகும் என்றனர்.