மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம்
கூடலூரில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
கூடலூர்
மத்திய அரசு 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில் ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை எனக்கூறி எதிர் கட்சிகள் புகார் தெரிவித்தது. இந்த நிலையில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி நீலகிரி மாவட்டத்திலும் பல இடங்களில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நடந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் ஜோஸ் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சி.கே.மணி, தங்கராஜ், கார்லஸ், விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பட்ஜெட் நகலை விவசாயிகள் சங்கத்தினர் எரிக்க முயன்றனர். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதனை தடுத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.