போலீசாரை கண்டித்து போராட்டம்

சிவகிரியில் போலீசாரை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-11 19:00 GMT

சிவகிரி:

சிவகிரியில் போலீசாரை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

போலீஸ் வாகனம் சேதம்

தென்காசி மாவட்டம் சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கடந்த 3-ந் தேதி நடந்தது. தேரோட்டத்தின் போது மேலரதவீதியில் தனியார் மண்டபம் முன்பாக நடுரோட்டில் சங்கரன்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, தேரை வடம் பிடித்து இழுத்து வந்த ேபாது, போலீஸ் வாகனத்தின் மீது தேரின் சக்கரம் உரசி சிறிது தூரத்திற்கு போலீஸ் வாகனம் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வாகனம் சேதம் அடைந்தது.

இந்த சம்பவத்தின் காரணமாக போலீசார், தேரை இழுத்து வந்தவர்களின் 18 வாலிபர்களை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்தனர். இதில் 6 பேர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போராட்டம்

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வாலிபர்களுக்கு ஆதரவாகவும், துணை போலீஸ் சூப்பிரண்டு மீது வழக்குப்பதிவு செய்து இடமாற்றம் செய்யவேண்டும். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசாரால் வாலிபர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகிரியில் தேவர் மகாசபை சார்பில் ஏராளமானவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் தேவர் சிலை முன்பாக நேற்று கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகிரி தேவர் மகாசபை தலைவர் குருசாமி பாண்டியன், துணைத் தலைவர் சேவுகப்பாண்டியன் என்ற விக்னேஷ்வர சித்தத்தம்பியார், செயலாளர் சுந்தர்ராஜன், துணைச் செயலாளர் கற்பகசுந்தரம், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் தீ கட்சியின் நிறுவனர் ராஜா மறவன், தூத்துக்குடி இசக்கி ராசா உள்பட திரளானவர்கள் பங்கேற்றனா். அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

போலீஸ் குவிப்பு

இந்த போராட்டம் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக தென்காசி போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம், தேவர் மகாசபை சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக சிவகிரி பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்