முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி

தை அமாவாசையையொட்டி மயிலாடுதுறை துலா கட்டம், பூம்புகார் காவிரி சங்கம துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-01-21 18:45 GMT

தை அமாவாசையையொட்டி மயிலாடுதுறை துலா கட்டம், பூம்புகார் காவிரி சங்கம துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

காவிரி துலா கட்டம்

மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலா கட்டம் காசிக்கு இணையான புனித நீராடும் இடமாக விளங்குகிறது. இங்குள்ள காவிரிக்கரையில் காசியைப்போன்று விஸ்வநாதர், கேதாரநாத் கோவில்களும் அமைந்துள்ளன. மேலும் ஆண்டுதோறும் மயிலாடுதுறை பகுதியில் உள்ள முக்கிய சிவாலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கொண்டுவரப்பட்டு கடைமுக தீர்த்தவாரி நடைபெறும்.

அப்போது பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடுவார்கள். இத்தகைய புகழ்பெற்ற காவிரி துலாக்கட்டத்தில்

புனித நீராடி, தர்ப்பணம் அளிப்பதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இந்துக்களால் கருதப்படுகிறது. அதன்படி தை அமாவாசையான நேற்று மயிலாடுதுறை துலா கட்ட காவிரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், புனித நீராடியும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இந்துக்களின் கடமை

மூதாதையர் நினைவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது. மாதந்தோறும் வரும் அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள் தை, ஆடி மற்றும் மகாளய அமாவாசை தினங்களில் வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைப்பதாக வேதங்கள் விளக்குகின்றன. காவிரி கடலோடு சங்கமிக்கும் பூம்புகாரில் தர்ப்பணம் செய்து வழிபட்டால் காசிக்கு சென்று வழிபட்டதாக காவிரி மகாமத்யம் என்ற நூல் விளக்குகிறது.

நேற்று தை அமாவாசையை ஒட்டி அதிகாலை முதலே தமிழக முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூம்புகார் காவிரி சங்கம துறையில் திரண்டு காவிரி ஆறு மற்றும் கடலில் புனித நீராடி தங்களுடைய மூதாதையர் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

சுமங்கலி பெண்கள்

சுமங்கலி பெண்கள் எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு தேங்காய் மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை காவிரியில் இட்டு வழிபட்டனர். சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார், பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மேற்பார்வையில் சுற்றுலாத்துறை பணியாளர்கள் மற்றும் போலீசார் கடற்கரையில் கண்காணிப்பு ணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை ஒட்டி சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பொறையாறு

பொறையாறு அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் ராஜகோபால சாமி கோவிலில் அருள்பாலித்து வரும் திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் சத்ரு உபாதைகள் கடன் தொல்லைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் 3 கண்களையும், பத்து கரங்களையும் உடையவர். சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு, பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீதம் ஆகியவற்றை கரங்களில் ஏந்தி முதுகின் இரு பக்கங்களிலும் கருடனுக்குரிய சிறகுகளோடு எழுந்தருளிக் காட்சி தருகின்றார். இதுபோன்ற ஆஞ்சநேயரின் திருமேனி இத்திருக் கோவிலில் மட்டுமே உள்ளது.

சிறப்பு திருமஞ்சனம்

நேற்று தை மாதம் அமாவாசையை முன்னிட்டு திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பால், தேன், இளநீர், சந்தனம் ஆகியவை கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயப் பெருமானுக்கு பக்தர்கள் வடை, துளசி, வெற்றிலை ஆகியவற்றால் மாலைகள் செய்து குங்குமம் மற்றும் பழம் தேங்காய் கொண்டு அர்ச்சனைகள் செய்தும் வழிபட்டனர். விழாவில் பல்வேறு மயிலாடுதுறை, சீர்காழி, காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்